search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமையாளர் கைது"

    • தாய், மகன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • பழமையான வீடுகள் இருப்பதால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் தர்கா வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜாகீர் உசேன் (45). பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாரம்மா (34). இவர்களுக்கு திருமணமான மகளும், 8-ம் வகுப்பு படிக்கும் முகமது அஸ்தக் (13) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோட்டில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலை ஜாகீர் உசேனின் வீட்டின் மேல் தள சுவர் இடிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாரம்மா, முகமது அஸ்தாக் மீது விழுந்தது. இதில் தாய், மகன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தியதில் 60 ஆண்டுகள் பழமையான வீட்டினை முறையாக பராமரிக்காமல் மேல் தளத்தில் தண்ணீர் தொடர்ந்து தேங்கியதாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து வீட்டினை முறையாக பராமரிக்காமல் உயிரிழப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளரான ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் ஏ.ஓ.கே. நகரை சேர்ந்த முகமதுயாசர் (43) என்பவர் மீது 304 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முகமது யாசரை நிபந்தனை ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

    இந்த பகுதியில் இதேபோல் பழமையான வீடுகள் இருப்பதால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • தமிழ்செல்வி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசனை கைது செய்தனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் கோவிந்தசாமித் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ரூ.22 ஆயிரம் கடன் வாங்கினார். இதுவரை ரூ.79 ஆயிரம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசன் (34), ஊழியர் சபரீஷ் ஆகியோர் தமிழ்செல்வி வீட்டுக்கு வந்து மேலும் ரூ.40 ஆயிரம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கையெழுத்திட்ட ஏராளமான வெற்று பத்திரத்தை பறிமுதல் செய்தனர். சிதம்பரத்தில் கந்துவட்டி தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    • பிரசாந்த் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என்று நிறுவன உரிமையாளரிடம் கேட்டதாக தெரிகிறது.
    • ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த தேங்காய் மட்டை எடுத்து பிரசாந்தை சரமாரியாக தாக்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது33). டிரைவரான இவர் அதேபகுதியில் உள்ள தனியார் தண்ணீர்கேன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் கடந்த 9 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தை முல்லை நகரைச் சேர்ந்த ரமேஷ் (41) என்பவர் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பிரசாந்த் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என்று நிறுவன உரிமையாளரிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் தரமுடியாது என்று கூறியதாக தெரிகிறது.

    இதன்காரணமாக கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். சம்பளம் உயர்த்தி தருவதாகவும் உடனே பிரசாந்தை வேலைக்கு வருமாறும் ரமேஷ் தெரிவித்தார். அவரது பேச்சை கேட்டு பிரசாந்த் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு ரமேஷூக்கும், பிரசாந்திற்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் இருந்த தேங்காய் மட்டை எடுத்து பிரசாந்தை சரமாரியாக தாக்கினார். இதில் பிரசாந்த பலத்த காயமடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பிரசாந்த் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

    • டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்கும் பணியில் ரெயில்வே பாது காப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இசேவை மையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.

    சேலம்:

    சேலம் ரெயில்வே கோட்ட பகுதிகளில் முறை கேடாக முன்பதிவு டிக்கெட் விற்கும் நபர்கள், அனுமதி பெறாமல் டிக்கெட் விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்கும் பணியில் ரெயில்வே பாது காப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை யில் திருப்பூர், அனுப்பர்பா ளையம், திலகர் நகர் பஸ் நிலையம் அருகே உள்ள இசேவை மையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது, 26 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 22 முன்பதிவு டிக்கெட்டுகள், 15ஆயிரம் ரூபாய் மதிப்பில் காலாவதி டிக்கெட் -9 கண்பிடிக்கப்பட்டது. இவர் அனுமதி பெறாமல் முன்ப திவு டிக்கெட்டுக்கள் எடுத்து கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், முன்பதிவு செய்ய பயன்படுத்திய கணினியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதன் உரிமையாளரான திருப்பூரை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • காப்பகத்தில் தங்கி உள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்களிடம், வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது.
    • காப்பகத்தில் இருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்தனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அருகே பனங்காட்டுப்பாக்கம் பகுதியில் அன்பகம் என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருபவர் வீரமணி. இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இந்தநிலையில் இந்த காப்பகத்தில் தங்கி இருந்த பெண் ஒருவருக்கு காப்பக உரிமையாளர் வீரமணி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்தார்.

    இந்த பதிவின் அடிப்படையில் தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த புகாரில் உண்மை தன்மை இருப்பது உறுதியானது. இதையடுத்து இது தொடர்பாக அதிகாரிகள் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரனீத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவுப்படி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காப்பகத்தில் மேலும் அதிரடி விசாரணை நடத்தினர்.

    இதில் காப்பகத்தில் தங்கி உள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்களிடம், வீரமணி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து வீரமணியை போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த காப்பகத்தில் இருந்தவர்களை வேறு காப்பகத்துக்கு இடமாற்றம் செய்தனர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காப்பகத்தை போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கிடையே அரசு புறம்போக்கு நிலத்தில் செயல்பட்டு வந்ததால் காப்பகத்திற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    • வைரமுத்து கண்டியாபுரம் செல்லும் வழியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.
    • விபத்து குறித்து பனையடிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வைரமுத்து(வயது40). இவர் கண்டியாபுரம் செல்லும் வழியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இங்கு நேற்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை.

    இந்த விபத்தில் கடையில் இருந்த தொழிலாளி கோட்டைபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பவர் உடல் கருகி பலியானார். மேலும் கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, வட்டாட்சியர் ரங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் விபத்து குறித்து பனையடிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் வைரமுத்துவை கைது செய்தனர்.

    • சம்மந்தம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் ஏராளமாக உள்ளன.
    • விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலை அடைந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சம்மந்தம் (வயது 36 ). இவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஒரு மரம் மட்டும் தப்புக் கொட்டையாகவே இருந்து வந்தது. இதனை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த பனைமரத்தில் மட்டும் கள் இறக்கி குடித்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சந்தானம், மரத்தில் ஏறி கள் எடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடி பாட்டிலில் ஊமத்தங்காய் பேஸ்டினை கலந்துவிடுகிறார்.

    அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி நேற்று அதிகாலை 3 மணியள வில் சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகின்றனர். வெளியில் வந்த சந்தானம் உடனடியாக 2 பேரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கிறார். விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலைக்கு வருவதை கண்ட மருத்துவர்கள், அவர்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் அளித்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பனை மர உரிமையாளர் சம்பந்தத்தை போலீசார் கைது செய்தனர். அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கியது, அதில் ஊமத்தங்காய் கலந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா பனைமரங்கள் உள்ள பகுதியை ஆய்வு செய்தார். மேலும், இது போன்று எங்கெல்லாம் பனைமரங்கள் உள்ளன. அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கள் இறக்க ப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து, அதனை அழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    • 85 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சாரமேடு ராயல் நகரில் உள்ள ஒரு மளிகைக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையில் மளிகைக்கடை உரிமையாளர் குமரேசன் ( வயது 48) என்பவர் தனது வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு இருந்து 85 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளர் குமரேசனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×